வயது இதுவென்று சொல்லத் தெரியாத நாளில்
பெற்றோர் வெளியூர் சென்ற தருணம்
உறவுக்காரன் வீட்டில் அடைக்கலம்
கண் முன்னே இனிப்புகள் காட்டி ஏமாற்றி
அதை தான் உண்டு என்னை
அவனை உண்ணச் செய்தான்
அன்று மட்டும் அவன் இல்லாமல் இருந்திருந்தால்....
அண்டை வீட்டில் ஒரு மிருகம்
மகன் என் அண்ணனின் தோழன்
தந்தை என் படுக்கை பகிர்ந்த பாவி
முரட்டு வேகத்தில் என்னுள் இறங்கி
வலிக்கி கத்திய என்னை வாய் பொத்தி..
இடியும் மழையும்..
வெளியில் சொன்னால் 'திருடன்' என
பொய்யுரைப்பேன் என மிரட்டி..
அன்று மட்டும் அவன் இல்லாமல் இருந்திருந்தால்...
பள்ளிப்ப்ருவத்தில் தேர்வுக்குப் படிக்கையில்
நண்பர்கள் ஒருவர் பின் ஒருவராய்..
இரவில் களித்தவர்கள்
மறுதினம் பகலில் நகைத்தார்கள்
உடல் கூசிப் போனேன்
தேர்வில் தொலைந்தும் போனேன்
இரவில் என்னைப் போற்றியவர்கள்
பகலில் நான் ஆண் இல்லை
என புறம் தள்ளினர், தனி மரமானேன்
அன்று மட்டும் அவன் இல்லாமல் இருந்திருந்தால்...
படுக்கையில் எனை ஆணாக்கி
அவன் பெண் ஆனான்
விடிந்து எழுந்து வெளியில் வந்து
எனக்கு பெண்மை பூசி
வீதியில் தள்ளி சிரித்தான்
அவன் மானம் காக்க..
அன்று மட்டும் அவன் இல்லாமல் இருந்திருந்தால்
இன்று நான் இப்படி போராட தேவையில்லை
அன்று என் முத்தத்தை தின்றவர்கள்
இன்று கையில் சட்டம் தாங்கி துரத்துகின்றனர்.
சுயநலவாதிகளும் பச்சோந்திகளும்
மட்டுமே வாழும் பூமி என
புது வேதம் பாடுகின்றனர்
நீ நீயாக இப்படியே வாழ்வது
பெரும் துரோகம் என
மாக்கள் கூவித் திரிகின்றனர்
வேசம் போட நான் தயாரில்லை
இனிக் கூசித்திரியவும் போவதில்லை
நான் நானாக இருப்பேன்
முட்டி உடைப்பேன் சட்டத்தையும்
எதிர்ப்பவன் தலையையும்..
No comments:
Post a Comment